Thursday, April 1, 2010

இந்தியாவில் புதிய வாங்கிகள் - சண்முகசுந்தரம்


வங்கித்துறையில் தனியார் மேலும் ஈடுபட உதவும் வகையில் உரிமம் வழங்குவது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இதை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தன்னுடைய 2010-11-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான நடவடிக்கைகளில் இந்திய ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் பரப்பளவுக்கும் அதன் மக்கள்தொகைக்கும் வங்கித்துறையின் சேவை முழுமையாகக் கிடைத்துவிடவில்லை என்பதால் மேலும் பல வங்கிகள் தொடங்கப்பட இங்கு நிரம்பவே வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் இந்தியாவிலேயே பல வங்கிகள் அதிலும் தனியார் வங்கிகள் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக திவாலாகியிருப்பதால் இத்தகைய உரிமம் வழங்குவதற்கு கடுமையான விதிமுறைகளை அரசு கடைப்பிடிப்பது அவசியம்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் தொடர்பான உண்மைகள் வெளிவந்தபோது நம் நாட்டின் தணிக்கை முறையே வலுவற்றவையோ என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கி இந்திய வங்கித்துறையைத் திறமையாகக் கட்டுப்படுத்தினாலும் ஒவ்வொரு வங்கியையும் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் அதனால் வைத்திருக்க முடியாது. பொதுவான விதிமுறைகளும் வழிகாட்டல்களும் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று மட்டுமே அதனால் பார்க்க முடியும்.
தனியார் துறையில் வங்கிகளைப் புதிதாக மேலும் தொடங்க உரிமம் அளிக்கும்போது, ஏற்கெனவே உள்ள பல தொழில் நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பிக்கும் என்று தெரிகிறது. சில தொழில் நிறுவனங்கள், குறிப்பாக மோட்டார் வாகன உற்பத்தித்துறையில் உள்ள நிறுவனங்கள் தங்களுடைய வாகனங்களைக் கடனில் வாங்குவதற்கு வசதியாகவே சில நிதி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இப்படிப்பட்டவை முறையாகவும், லாபகரமாகவும் இயங்கி வருகின்றன என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால் இவை போன்ற நிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்கினால் அவற்றின் நிர்வாகமும் லாபம் ஈட்டும் திறனும் இப்படியே இருக்கும் என்று கூறிவிட முடியாது. அதற்காக சந்தேகப்பட்டு உரிமம் தராமல் இருந்துவிடவும் முடியாது. எனவே ரிசர்வ் வங்கி உரிமம் வழங்குவதற்கு முன்னதாக வங்கித்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய அரசுத்துறை வங்கிகளின் முன்னாள் நிர்வாகிகளையும், தனியார் துறையின் நிதி நிர்வாக நிபுணர்களையும் அழைத்துப் பேசி, விதிகளையும் வழிமுறைகளையும் உருவாக்குவது நல்லது.
தொழில் நிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்குவதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. தீமைதான் நடக்கும் என்று கருதி அனுமதிக்காமலேயே இருப்பது நல்லதல்ல.
அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதும் நிதித்துறையில் நெருக்கடி ஏற்பட்டு தனியார் வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் திவால் ஆனதும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. அப்போதுதான் அளவுக்கு மீறிய செயல்பாட்டுச் சுதந்திரம் தீய விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது உணரப்பட்டது.
இந்தியாவின் வங்கித்துறை இந்த நெருக்கடி காலத்திலும் சரியாமல் இருந்தது எப்படி என்று மேற்கத்திய நாடுகளின் நிபுணர்கள் வியப்படைந்ததுடன் அதன் கட்டமைப்பைத் தங்கள் நாட்டிலும் கொண்டுவர உறுதி எடுத்துள்ளனர் என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம்.
தனியார் வங்கிகள் குறிப்பிட்ட பிரதேசங்களிலும் குறிப்பிட்ட சில வகுப்பாரிடையேயும் குறிப்பிட்ட சில தொழில்களுக்காக மட்டுமேயும் செயல்பட வாய்ப்பு உண்டு. அத்துறைகளின் அல்லது சமுதாயங்களின் நன்மைக்கு அது பயன்படும் என்றால் அனுமதிப்பதில் தவறில்லை.
விலைவாசி உயர்வால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவரும் இந்த வேளையிலும் மக்களின் சிறுசேமிப்பு பெரிய தொகையாக இருப்பதை மறுக்க முடியாது. வங்கிகளின் சேவை அதிகம் சென்றடையாத பகுதிகளில் தனியார் வங்கிகள் கிளைகளைத் திறந்து சேவை செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. அவை நகர்ப்புறங்களில் ஏற்கெனவே வங்கிப் பணிகளுக்குச் சாதகமான இடங்களில்தான் சேவை செய்ய முன்வரும். தனியார் வங்கிகளின் முதல் நோக்கம் லாபம் சம்பாதிப்பதுதான். அப்படி லாபம் சம்பாதிக்க வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதால் விரைவான, கனிவான சேவையை அவை நிச்சயமாக அளிக்கும். அத்தகைய வங்கிகளுக்குச் சிறிது சமுதாய நோக்கமும் இருந்தால் தனியார் வங்கிகளின் வருகையை ஆட்சேபிக்க வேண்டியதில்லை.
வங்கிகளின் வேலை நேரம் இப்போதும்கூட வாடிக்கையாளர்களின் முழுத்திருப்திக்கு ஏற்ப இல்லை என்பதே உண்மை. ஏ.டி.எம். என்று அழைக்கப்படும் 24 மணி நேர பணப்பட்டுவாடா கணினி இயந்திரங்களும் அடிக்கடி பழுதாவதால் நேரடியாகப் பணம் பெறுவதையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். அதற்கு வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
பெரிய தொழில் நிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவதில் பிரச்னை என்ன இருக்க முடியும் என்று சிலர் கேட்கலாம். அவர்கள் வங்கிகளை நடத்தினால் சிறந்த நிர்வாகிகளையே நியமிப்பார்கள், வங்கிக் கிளைகளும் நல்ல சேவையையே அளிக்கும் என்பதில் எல்லாம் சந்தேகமே இல்லை. ஆனால் அவற்றின் செல்வாக்கு காரணமாக அந்த வங்கிகளைக் கண்காணிக்கவும் வழிநடத்தவும் வேண்டிய அமைப்புகள் சற்று தடுமாறவே செய்யும்.
இதனால் ஏதேனும் தவறு நிகழ்ந்தால்கூட அது உடனே வெளியே தெரியாது. அத்துடன் முறைகேடாக ஏதேனும் நடந்தால் அது முற்றிய பிறகே தெரியவரும். அந்த நேரத்தில் அரசோ, ரிசர்வ் வங்கியோ தலையிட்டால்கூட பிரச்னையைத் தீர்க்க முடியாது. இதுதான் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிப்பதில் உள்ள சிக்கல். அத்துடன் அந்த வங்கிக்கு கிடைக்கும் நிதியில் கணிசமான பங்கு அந்தத் தொழில் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்குச் சாதகமாகவே திருப்பி விடப்படுவதும் நடைபெறும். இதனால்தான் தயக்கங்கள் இருக்கின்றன.
அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் தொழில் நிறுவனங்களின் துணை நிறுவனங்களில் முதலீடு செய்த நிதிகூட அவர்களுக்குத் தெரிவிக்கப்படாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தபோது இந்த முறைகேடு வெளியே தெரிந்தது. எனவே பிரிட்டிஷ் அரசு விழித்துக் கொண்டு, முதலீட்டாளர்கள் அன்றாடம் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் தொகை எங்கே, எப்படிப் பெறப்பட்டது என்ற கணக்கையும் தர வேண்டும் என்று புதிய விதியைப் புகுத்தியிருக்கிறது.
இவற்றையெல்லாம் நெஞ்சில் நிறுத்தி இந்திய ரிசர்வ் வங்கியும் இதில் மேற்கொண்டு தீவிரம் காட்டலாம் என்பதையே குறிப்பிட விரும்புகிறோம்.

1 comment:

  1. machi romba padipiyo.... u r the topper in whole ME. and innovation thinking too...

    ReplyDelete